ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலத் தகராறில் முதியவர் ஒருவரைக் கொன்று அதனை ஃபேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பு செய்த தோடா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த பைரவ் சிங் என்பவருக்கும், ராம் கிருஷ்ணா என்பவருக்குமிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்றும் இவர்களுக்கிடையே தகராறு வெடித்தது. இதில் பைரவ் சிங், ராம் கிருஷ்ணாவை கோடாரியால் தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறந்தார். இந்த கொடூர காட்சிகளை ஃபேஸ்புக் லைவ் மூலமாக ஒளிபரப்பு செய்துள்ளார் பைரவ் சிங். அவரை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
இது குறித்துப் பேசிய தோடா மாவட்டத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் அப்துல் கயூம், "பைரவ் சிங் என்ற நபர் ராம் கிருஷ்ணா என்ற நபரை கோடாரியால் தாக்கிக் கொன்றதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது ராம் கிருஷ்ணா இறந்துவிட்டார். அவரின் அத்தை அஞ்சு தேவி படுகாயமடைந்த நிலையில் இருந்தார். ராம் கிருஷ்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அஞ்சு தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய குற்றவாளி பைரவ் சிங் காட்டிலிருந்து பிடிபட்டார். அவுர் வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் விரைவாகச் செயல்பட்டு நான்கு மணி நேரத்திற்குள் கொலையாளியைப் பிடித்திருக்கிறோம்" என்று கூறினார்.