ஒடிசாவில் வன அதிகாரி சுட்டுக்கொலை: வேட்டைக்கும்பல் அட்டூழியம்!


சுட்டுக்கொல்லப்பட்ட மதி ஹன்ஸ்தா.

ஒடிசாவில் உள்ள சிமிலிபால் புலிகள் சரணாலயத்தில் வேட்டையைத் தடுத்த வன அதிகாரி, வேட்டைக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் நேற்று நள்ளிரவு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய 6 வேட்டைக்காரர்கள், பீட் ஹவுஸ் பகுதியில் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு வனத்துறையினர் வந்ததைக் கண்ட வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வனத்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ஆனால், வேட்டைக்காரர்கள் சுட்டதில் வன அதிகாரி மதி ஹன்ஸ்தா(45) மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து சிமிலிபால் வடக்கு பிரிவு வனத்துறை துணை இயக்குநர் சாய்கிரண் இன்று கூறுகையில், " சிமிலிபால் சரணாலயம் பகுதியில் நேற்று நள்ளிரவு வேட்டைக்காரர்கள் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து வன அதிகாரி மதி ஹன்ஸ்தா உள்ளிட்ட வனத்துறையினர் அங்கு விரைந்தனர். அங்கு நடந்த துப்பாக்கிச்சண்டையில் வன அதிகாரி மதி ஹன்ஸ்தா கொல்லப்பட்டார். அவர் சிமிலிபாலில் உள்ள பாரஹமுடா மலைத்தொடர் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்" என்று கூறினார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் சிமிலிபால் காட்டில் 35 வயது வனக்காவலர் வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது வன அதிகாரி மதி ஹன்ஸ்தா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x