உத்தரப் பிரதேசத்தில் 4 கொலை வழக்குகள் உள்பட 32 வழக்குகளில் தொடர்புடைய மாஃபியா வினோத் உபாத்யாய் வீடு புல்டோசரால் இன்று இடித்துத் தள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இவர் அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி செய்யாமல், புல்டோசரை வைத்து ஆட்சி செய்வதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அரசுக்கு எதிராக போராடுபவர்கள், அரசியல் எதிரிகள் வீடுகளை புல்டோசரால் அவரது அரசு இடித்துத் தள்ளுவதாக புகார் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 4 கொலை வழக்குகள் உள்பட 32 வழக்குகளில் தேடப்படும் மாஃபியா வினோத் உபாத்யாய் வீட்டை கோரக்பூர் மாவட்ட நிர்வாகம் புல்டோசரால் இன்று இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலைமறைவாக உள்ள மாஃபியா வினோத் உபாத்யாயை கைது செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு பரிசு தரப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரிஷன் பிஷ்னோய் கூறுகையில், " கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ள வினோத் உபாத்யாய், அரசு நிலத்தை ஆக்கிரமித்ததுடன், பக்கத்து நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அவர் வீடு இங்கு கட்டியுள்ளார். அந்தச் சொத்து கோரக்பூர் மேம்பாட்டு ஆணையம் மூலம் அடையாளம் காணப்பட்டது. அதன் பிறகே இன்று இடிக்கப்படுகிறது. அத்துடன் அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது. அவரைக் கைது செய்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை அதிகரிக்கப்படும் " என்று கூறினார்.
கோரக்பூரை நடு நடுங்க வைக்கும் மாஃபியா ஒருவரின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.