தினமும் தூக்க மாத்திரை; தினமும் பாலியல் வன்கொடுமை: தாய், சித்தியால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்


பாலியல் தொல்லை

13 வயது சிறுமிக்கு தினமும் தூக்க மாத்திரை கொடுத்து பெற்ற தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியை 13 வயது சிறுமி ஒருவர் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் தனியாக பிரிந்து சென்ற நிலையில் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். இந்தநிலையில் பள்ளி கோடை விடுமுறையின் போது மகளை தேடி வந்த தாய், விடுமுறை காலத்தில் தன்னுடன் இருக்குமாறு கூறி மகளை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

தனது தாய் அழைத்து சென்ற இடத்தில் அந்த சிறுமியின் பெரியம்மா, சித்தி ஆகியோரும் இருந்த நிலையில், இரவானதும், அந்த சிறுமிக்கு தினமும் ஒரு தூக்க மாத்திரையை கொடுத்துள்ளனர். இதனால் அந்த சிறுமி தூக்க மயக்கத்திற்கு சென்ற நிலையில் சில காமுகர்களுக்கு இறையாக்கியுள்ளார் அந்த கொடூர தாய்.

இதனால் தினமும் பாலியல் கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி தனது தாயின் பிடியில் இருந்து தப்பி பாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையினை தனது பாட்டியிடம் மிரட்சியுடன் கூறி கதறியுள்ளார். இதை கேட்ட சிறுமியின் பாட்டி இது குறித்து தல்லாகுளம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியின் தாய், சித்தி உள்ளிட்டவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், அதேபோல் சிறுமியையும் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய், சித்தி, சித்தியின் மகன், பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என 8 பேரை தல்லாகுளம் மகளிர் போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

தாய் ஒருவர், தான் பெற்ற பிள்ளையையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x