திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பேய் நடமாட்டம் இருப்பதாக புரளி கிளம்பியுள்ளது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்- பெங்களூரு சாலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் இரு வேறு விபத்துகளில் குடும்பத்துடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 15ம் தேதி மேல்மலையனூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது கர்நாடகாவை சேர்ந்த 8 பேர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே கடந்த 23ம் தேதி, விபத்து நடந்த பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் மற்றொரு விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். ஒரு வார காலத்திற்குள் அடுத்தடுத்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு கட்டுக்கதைகளை பலரும் கிளப்பிவிட்டு உள்ளதால் ஏராளமான புரளிகள் சுற்றி வருகிறது. குறிப்பாக விபத்து நடந்த பகுதி, முன்பு விவசாய பண்ணையாக இருந்ததாகவும், அடர்ந்த காடு போல் இருந்த பகுதியை சீரமைத்து இந்த சாலை அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இரவு 6 மணிக்கு மேல் இந்த பகுதியில் காற்று வேகமாக வீசுவதாகவும், நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் இந்த பகுதியில் குலைத்தபடி சுற்றி வருவதாகவும், சாலையின் நடுவே வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் மர்ம உருவங்கள் நடமாடுவதாகவும் பொதுமக்களிடையே பேசு பொருளாக இருந்து வருகிறது. விபத்தில் உயிரிழந்த 15 பேர் தான் இப்படி ஆவியாக நடமாடுவதாகவும் அச்சத்தில் இருப்போர் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.
இந்த பகுதியை கடந்து டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டி இருக்கும் நிலையில், உள்ளூரைச் சேர்ந்த குடிமகன்கள் பலரும் டாஸ்மாக் கடைக்கு செல்வதையே குறைத்துக் கொண்டிருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பதோடு, வீட்டின் வாசலில் வேப்பிலை கட்டி, விளக்கேற்றி சாமி கும்பிட்டு வருவதாகவும் கதைகள் பரப்பப்பட்டு வருகிறது.
இதற்கு தூபம் போடும் வகையில் கலசப்பாக்கம் சந்தை மேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ள தாசில்தார் குடியிருப்பில் கடந்த 11 வருடங்களில் 14 தாசில்தார்களில் யாருமே இந்த குடியிருப்புகளில் குடியிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். இரவு நேரங்களில் அமானுஷ்ய நடமாட்டம் தென்படுவதால் இங்கு தாசில்தார்கள் தங்க அச்சம் தெரிவித்து சொந்த வீடுகளுக்கு சென்று விடுவதாகவும் மக்களிடையே பேச்சு நிலவி வருகிறது.
இது போன்ற மூடநம்பிக்கைகளை களையும் வகையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விபத்துகளை குறைக்கும் வகையில் இந்த பகுதியில் சாலையோர மின்விளக்குகள் அமைப்பது மற்றும் ஒளிரும் விளக்குகளை பொருத்துவதோடு, காவல்துறையினர் ரோந்து வாகனங்களில் அடிக்கடி இவ்வழியே சென்று வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!