மனைவியை ஓடஓட விரட்டி வெட்டிய கணவன்: சிகிச்சைக்கு வந்தபோது அரசு மருத்துவமனை முன் பயங்கரம்


கணவன் கைது

பழநியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மனைவியை, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற கணவனை போலீஸார் கைது செய்தனர். கணவனின் வெறிச்செயலால் படுகாயமடைந்த மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள வி.கே.மில் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு நடந்து வந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலை மணி தாக்கியதால் பழநியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரியதர்ஷினி சிகிச்சை பெற வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மனைவியை தேடி வந்த மணி, பிரியதர்ஷினி மருத்துவமனை வளாகத்தில் நிற்பதை கண்டுள்ளார். அங்கு அரிவாளுடன் வந்த மணி, பிரியதர்ஷினியை ஓட ஓட துரத்தி வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரியதர்ஷினியை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்ற மணியை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நோயாளிகள் கூடியிருந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயன்ற கணவனின் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

x