பெட்டிக்கடையில் மது விற்பனை: கைது செய்யச் சென்ற எஸ்.ஐயை அடித்து உதைத்த கணவன், மனைவி!


போலீஸ்காரர் மீது தாக்குதல்

விருதுநகர் மாவட்டத்தில் திருட்டு மது விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஆய்வுக்கு சென்ற எஸ்.ஐ மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய தம்பதியினர் தலைமறைவாகினர். அவர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ளது சுந்தரராஜபுரம். இங்குள்ள மாசானம் கோயில் பகுதியைச் சேர்ந்த சுருளி, அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தினமும் டாஸ்மாக் கடை திறப்பதற்கும் முன்பே திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக சேத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து எஸ்.ஐ சுந்தர்ராஜ் ஆய்வுக்குச் சென்றார். அப்போது பெட்டிக்கடையின் முன்னாள் டூவீலரில் மது பாட்டில்களை வைத்து சுருளியின் மனைவி தெய்வத்தாய் விற்றுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சுந்தர்ராஜ், கணவன், மனைவி இருவரையும் மடக்கிப் பிடித்தார்.

அப்போது சுருளியும், தெய்வத்தாயும் சேர்ந்து எஸ்.ஐ சுந்தர்ராஜை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதனால் காயமடைந்த சுந்தர்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் சுருளி, அவரது மனைவி தெய்வத்தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே சுருளி, தெய்வத்தாய் கடையில் இருந்து 36 மது பாட்டில்கள், அவர்களது இருசக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

x