தண்ணீருக்குப் பதில் ஸ்பிரிட் குடித்த சிறுமி உயிரிழப்பு: மதுரை அரசு மருத்துவமனையில் துயரம்!


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையின் போது தண்ணீருக்குப் பதில் ஸ்பிரிட் கொடுக்கப்பட்டதால் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார்-தீபா தம்பதியரின் மகள் அகல்யா (8). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுநீரக் செயல்பாடு குறைவு காரணமாக புதுவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் உயர் சிகிச்சை பெற வேண்டி கடந்த மாதம் 30-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இங்கு இருமுறை சிறுமி அகல்யாவிற்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சிறுமி அகல்யாவிற்கு ரத்த அழுத்தம் உயர்ந்து வலிப்பு ஏற்பட்டதாகவும், அப்போது அவரது படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து சிறுமியின் தாய் எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அது தண்ணீர் இல்லை என தெரிந்த சிறுமி அதனை துப்பிய நிலையில் சிறுமிக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி அகல்யா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து குழந்தையின் இறப்பு குறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கு நேர்ந்த கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

x