கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த தனியார் பஸ்: அடியில் சிக்கி பலியான நடத்துநர்!


காரைக்குடி அருகே கவிழ்ந்த பஸ்

காரைக்குடி அருகே எதிரே வந்த டூவீலரில் மோதாமல் இருக்க திருப்பிய போது தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இருந்து காரைக்குடிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. குன்றக்குடி அருகே அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க பேருந்தை அதன் ஓட்டுநர் அதே வேகத்தில் திருப்ப முயன்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தனியார் பேருந்தின் நடத்துநர் சிவா (22) பேருந்து அடியில் சிக்கி பலியானார். மேலும், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றக்குடி போலீஸார், காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான மதுரையைச் சேர்ந்த நடத்துநர் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x