பி.எஃப் பணத்திற்கான விண்ணப்பம் நிராகரிப்பு; அலுவலகம் முன்பு விஷம் குடித்து இறந்த கேன்சர் தொழிலாளி


தற்கொலை செய்து கொண்ட சிவராமன்

கேரளாவில் பிஎஃப் பணத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பி.எஃப் அலுவலகம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பெரம்பரா பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன். அப்போலோ டயர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவராமன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பி.எஃப்., பணத்தை வழங்குமாறு அவர் இ.பி.எஃப்., நிறுவனத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததால் அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தார்.

கொச்சி இ.பி.எஃப்.ஓ., அலுவலகம்

தனது சிகிச்சைக்கு செலவிடும் வகையில் தனது பி.எப்., கணக்கில் உள்ள 80 ஆயிரம் ரூபாயை வழங்குமாறு அவர் பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளார். ஆனால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி பி.எப்., பணம் வழங்குவதில் தாமதமாகி வந்துள்ளது. குறிப்பாக 1960ம் ஆண்டில் பள்ளிப்படிப்பை முடித்த சிவராமனிடம், அவரது கல்வி ஆவணங்களை வழங்குமாறு பி.எப்., நிர்வாகம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பலமுறை இவ்வாறு தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாகவே சிவராமன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

சிவராமன் தற்கொலை

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று கொச்சியில் உள்ள பி.எஃப்., அலுவலகத்திற்கு வந்த சிவராமன், தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த பி.எஃப்., பணியாளர்கள், அவரை உடனடியாக மீட்டு எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரை ஆஸ்ட்ர் மெடிசிட்டி மருத்துவமனைக்கு நள்ளிரவில் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று அதிகாலை 5 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த சிவராமனின் சட்டை பாக்கெட்டில் தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் பல்வேறு பி.எஃப்., நிறுவன ஊழியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்திற்கு சிவராமனின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிவராமனின் மகன் ரத்தீஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் எனது தந்தை பல ஆண்டுகளாகவே சிரமத்திற்கு உள்ளாகி வந்தார். மிகவும் மோசமான காரணங்களை கூறி பி.எஃப்., நிர்வாகம் அவரது பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதுதான் என் தந்தையின் முடிவிற்கு காரணம். பி.எஃப்., ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x