பொய்யான புகாரில் 11 முஸ்லிம் சிறுமிகள் கைது: செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பரபரப்பு!


செகாந்திராபாத் ரயில் நிலையம்.

செகந்திராபாத்தில் பொய்யான புகாரின் அடிப்படையில் 11 முஸ்லிம் சிறுமிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஆள் கடத்தல் புகாரின் பேரில் 11 சிறுமிகள் கைது செய்யப்பட்டனர். சிறுமிகள் தங்கள் குடும்பத்தினருடன் கம்மம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செகந்திராபாத் ரயில் நிலையம் வந்தபோது இந்த சம்பவம் நேற்று நடந்தது.

அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி), ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மற்றும் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு (ஏஎச்டி) உள்ளிட்ட பல அதிகாரிகளால் ரயில் நிலையம் வந்த சிறுமிகள் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஹபீஸ் பாபா நகர், சந்தோஷ்நகர் மற்றும் சந்திராயன்குட்டாவில் வசிப்பவர்கள்.

இதையடுத்து அவர்கள் தங்களது ரயில் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டுகளை வழங்கிய போதும், ஆம்பர்பேட்டையில் உள்ள சிறார் நல மற்றும் சீர்திருத்த மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக்கின் செய்தி தொடர்பாளர் அம்ஜெத் உல்லா கான், இதுதொடர்பாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சிறுமிகள் மீதான புகார் பொய்யானது என்று எடுத்துரைத்தார்.

செகந்திராபாத் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) நடத்திய விசாரணையில், முஸ்லிம் சிறுமிகள் தவறான புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது புகாரை பதிவு செய்தவர், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில், உண்மைகள் எதையும் சரிபார்க்காமல் செய்தது தெரியவந்துள்ளது. அத்துடன் சிறுமிகள் மீது புகார் அளித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x