ஒடிசாவில் கிங்ஃபிஷர் பறவையை சித்ரவதை செய்து அதை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்ட வாலிபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குரு டேலி. இவர் அறிய பறவை இனமான கிங்ஃபிஷர் பறவையைப் பிடித்து கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியானது.
அந்த வீடியோவில், அந்த சின்னஞ்சிறு பறவையின் தலையைப் பிடித்து வாலிபர் கதற கதற சித்ரவதை செய்யும் கொடூர காட்சி பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் குரு டேலி வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்த் நந்தா அந்த வீடியோவை வெளியிட்டார். அதில், "நம்மிடையே இப்படிப்பட்ட கொடூரமான மனிதர்கள் இருப்பதை நம்புவது கடினமாக உள்ளது. பறவையை சித்ரவதை செய்து அதை வீடியோவாக வெளியிட்ட குரு டேலி, வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.
இதே போல கடந்த மாதம் தொடக்கத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் மயிலின் இறகுகளைப் பிய்த்து போடும் நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.