'பிளிப்கார்டில் இந்த உடைந்த பொருள் தான் வந்தது': வசமாக சிக்கிய மோசடி பெண்!


பெண் மீது மோசடி புகார்

பிளிப்கார்ட்டில் பொருளைப் பெற்று கொண்டு பார்சலில் உடைந்த பொருளை வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண் மீது டெலிவரி ஊழியர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்தீக் (20). இவர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி 20-ம் தேதி ஆழ்வார் திருநகரில் வசிக்கும் பார்கவி வீட்டிற்கு பார்சலில் வந்த பொருளை டெலிவரி செய்வதற்காக சித்தீக் சென்றுள்ளார்.

அங்கு பார்கவியிடம் பார்சலைக் கொடுத்து விட்டு அதற்குண்டான 43.617 ரூபாயை தருமாறு கேட்டுள்ளார். அப்போது பொருளைச் சரிபார்த்து விட்டு பணம் தருவதாக கூறிய விட்டு உள்ளே சென்ற பார்கவி 15 நிமிடங்கள் கழித்து வெளியே வந்து பொருள் உடைந்து இருப்பதாக கூறி பார்சலைத் திருப்பி கொடுத்துள்ளார்.

இதனால் பொருளைப் பெற்றுக்கொண்ட சித்தீக், அலுவலகத்திற்கு வந்து பார்சலைப் பிரித்துப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால், அதில் உடைந்த வேறு பொருள் இருந்தது. இதுகுறித்து உடனே பார்கவியிடம் தொடர்பு கொண்டு அவர் கேட்டுள்ளார். அதற்கு உடைந்த பொருள் தான் பார்சலில் இருந்தது என்றும், பொய் கூறினால் போலீஸில் புகார் அளித்து விடுவேன் என சித்தீக்கை பார்கவி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன சித்தீக் போலீஸில் புகார் அளிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் அவரிடம் உடைந்த பொருளுக்கான பணத்தைச் செலுத்துமாறு கூறியதால் வேறு வழியின்றி சித்தீக் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பார்கவி மீது நேற்று புகார் அளித்தார்.

இதன் பேரில் வளசரவாக்கம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏற்கெனவே இதே போல கடந்த மே மாதம் 43 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை பார்கவி ஆர்டர் செய்து, பின்னர் அதனை மாற்றி வேறு ஒரு பொருளை பார்சலில் வைத்து திருப்பி கொடுத்ததாக புகார் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பார்கவியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x