புதுமாப்பிள்ளையின் உயிரைப் பறித்த 'சன் ஸ்ட்ரோக்': வெப்ப அலையால் தகிக்கும் தெலங்கானா!


உயிரிழந்த திருப்பதி. சோகத்தில் உறவினர்கள்.

தெலங்கானாவில் வெப்ப அலை காரணமாக புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கௌதாலா மண்டலத்தில் உள்ள ஆசிபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் குண்ட்லா திருப்பதி(26). இவருக்கும் மஞ்சிரியாலா மாவட்டம், பீமினி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து திருமணப் பத்திரிகை வைக்கும் பணியில் திருப்பதி ஈடுபட்டிருந்தார். கடந்த சில நாட்களாக கௌதாலா மண்டலத்தில் வெப்பத்தில் அளவு உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக 43 டிகிரி வெயில் அடித்து வருகிறது.

இந்த நிலையில், தனது திருமண ஏற்பாடுகளுக்காக வெயிலில் அலைந்து திரிந்த திருப்பதிக்குத் திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவர் திருப்பதி காகஸ்நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மாஞ்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நேற்று அவருக்கு நடக்க இருந்த திருமணம் நின்று போனது. திருப்பதியின் அண்ணன் ஸ்ரீனிவாஸ் உடல்நலக்குறைவால் ஆறு மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்த நிலையில் வெயில் கொடுமையால் அவரது தம்பி திருப்பதி பலியாகியுள்ளார். வெயில் கொடுமையால் மணமகன் பலியானதால், மணமகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அழுது துடித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் முழுவதும் வெப்பஅலை அதிகரித்து வருவதால் பருவமழை தாமதமாகி வருகிறது. இந்த வெயில் அடுத்த சில வாரங்களுக்குத் தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிப்பு அதிகமாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

எனவே, பகல் 11 மணி முதல் மாலை 4 மணிவரை வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள் வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லது என்று கூறியுள்ள வானிலை, இதனை மீறி வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று கூறியுள்ளது.

x