சைதாப்பேட்டை பெண்ணை பதறவைத்த திருடனுக்கு மாவு கட்டு: போலீஸில் அதிர்ச்சி வாக்குமூலம்


செயின் பறிப்பில் ஈடுபட்ட ஹக்கீம்

சென்னையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பில் ஈடுபட்ட வழிபறி திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு வாய்தாவிற்கு பணம் தேவைப்பட்டதால் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை கருணாநிதி தெருவை சேர்ந்தவர் பூங்கொடி (43). இவர் நேற்று முன்தினம் இரவு கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெரு வழியாக நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர் பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றார். செயின் பறிப்பு சம்பவத்தின் போது பூங்கொடி கீழே விழுந்ததில் கழுத்து மற்றும் கை கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் பூங்கொடி அளித்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சைதாப்பேட்டை கோத்தமேடு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஹக்கீம்(24) செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருந்த ஹக்கீமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். ஹக்கீம் மீது ஏற்கெனவே உடுமலைப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் செயின் பறிப்பு, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் தனது கூட்டாளி வினோத் என்ற சோத்துப்பானை மணிகண்டன் என்பவருடன் வழக்கு ஒன்றின் வாய்தாவிற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்ததும், பின்னர் விசாரணை முடிந்த இருவரும் மது அருந்தியதும் தெரியவந்தது.

மேலும் வழக்கு வாய்தாவிற்கு அதிக பணம் தேவைப்படுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் பேசி கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹக்கீம், வினோத்தின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து சென்ற பூங்கொடியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குற்றவாளி ஹக்கீம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் கையில் மாவு கட்டு போடப்பட்டதாகவும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x