பரபரப்பு… திருவாரூர் அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!


தீ விபத்து

திருவாரூர் அருகே வலங்கைமானில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வலங்கைமான் பகுதியில் 12 பட்டாசு உற்பத்தி ஆலைகளும், 48 பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் குடவாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் பின்புறம் இருப்பு வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின.

வெடித்துச் சிதறிய பட்டாசுகள்

தகவல் அறிந்த வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.

விபத்தின்போது கடையில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக வலங்கைமான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி இருப்பு வைக்கப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இதேபோன்று வலங்கைமான் பகுதியில் பல இடங்களில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

x