சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!


வெற்றி துரைசாமி

சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணியில் கிடைத்த உடல் பாகம் அவருடையது தானா என பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சட்லஜ் நதியில் விழுந்த கார்

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி (45). தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சென்றார். அவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசா நகரில் இருந்து சிம்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

உள்ளூரை சேர்ந்த தன்ஜின் காரை ஓட்டினார். கின்னவுர் மாவட்டத்தில் பாங்கி நல்லா பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், 200 மீட்டர் ஆழத்தில் உள்ள சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியும், ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். பின்னர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டார்.

வெற்றி துரைசாமி

ஆனால் வெற்றி துரைசாமியை காணவில்லை. அதனால் அவரை தேடும் பணி நேற்று தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்றது. விபத்து நடைபெற்ற பகுதியில் ஆற்றில் தண்ணீரின் வேகம் மிக வேகமாக இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் மாயமான தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சைதை துரைசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சட்லஜ் நதி அருகே வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் தகவல் தெரிவிக்க காவல்துறை மூலம் அவர் அறிவித்துள்ளார். இதற்கிடையே சட்லஜ் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர், கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பாகத்தை மீட்டனர். அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்காக அம்மாநில போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து உடலை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x