உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் நீதிக்காக காத்திருக்கிறேன்: கவுசல்யா!


கவுசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என அவரது மனைவி கவுசல்யா தெரிவித்தார்.

மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் மற்றும் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கவுசல்யா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ‘’2016-ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு சங்கர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு 2 தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சங்கர் படுகொலை வழக்கின் முதல் குற்றவாளியான சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு, சங்கரின் மனைவி கவுசல்யா, சங்கரின் தம்பி விக்னேஷ்வரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகளாகியும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக மேலும் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

தமிழக அரசு இந்த வழக்கினை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த ஆணவக் கொலை வழக்குகளில் 6 வழக்குகளில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சங்கரின் கொலை வழக்கு 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது இது பாதிக்கப்பட்டவர் என்கிற தரப்பில் மனதுக்கு வேதனையாக உள்ளது. சங்கர் படுகொலை வழக்கில் உறுதுணையாக இருப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் இதுவரை வழக்கு விசாரணைக்கு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்’ என்றனர்.

x