சங்கரன்கோவில் அருகே இரவில் திடீரென கூட்டமாக புகுந்த நாய்கள் கொட்டத்திற்குள் புகுந்து கடித்ததில் 32 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ளது தெற்கு சங்கரன்கோவில் ஊராட்சி. இங்குள்ள செந்தட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(39) இவர் செந்தட்டிக்கும் வேப்பங்குளத்திற்கும் செல்லும் சாலையில் தோட்டம் ஒன்றில் ஆட்டிற்கான கொட்டகை அமைத்து 41 ஆடுகள் வளர்த்து வந்தார்.
இவர் இன்று கொட்டகைக்கு சென்று பார்த்தபோது 32 ஆடுகள் கடிபட்ட நிலையில் இறந்துகிடந்தன. இதனைத் தொடர்ந்து அவர் திருட்டைத் தடுக்கும் நோக்கத்தில் கொட்டகையில் வைத்திருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளைப் பார்த்தார். அதில் நள்ளிரவில் கூட்டமாக வந்த நாய்கள் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை சரமாரியாகக் கடித்தது பதிவாகி இருந்தது.
இதில் 24 செம்மறி ஆடுகளும், எட்டு வெள்ளாடுகளும் உயிர் இழந்தன. மேலும் 9 ஆடுகள் நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்துள்ளன. அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லையும், பக்கத்து தோட்டங்களில் வளர்க்கும் நாய்களின் தொல்லையாலும் இந்த அசம்பாவிதங்கள் நடப்பதாக அப்பகுதி கால்நடை வளர்ப்போர் வேதனையுடன் குறிப்பிட்டனர்.