மாணவிகள், பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவர் சமூக வலைதளங்கள் வழியாக அறிமுகமான மாணவிகள், பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை காட்டி நெருக்கமாக பழகியுள்ளார். அத்துடன் அவர்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பண மோசடி செய்தது உட்பட பல்வேறு வழக்குகளில் போலீஸார் இவரைக் கைது செய்தனர்.
இவர்மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு முதலே காசி சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். போக்சோ, கந்துவட்டி, பாலியல் வன்கொடுமை உள்பட பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் காசியின் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனை போலீஸார் கைதுசெய்தனர். அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். நாகர்கோவில் காசி தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். இதில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் இவ்வழக்கில் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.