மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டதில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் குச்வாடா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராம்மூர்த்தி ரகுவன்ஷி என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவர் ஜிதேந்திர ரகுவன்ஷி, வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து வந்து ராம் மூர்த்தியின் நிலத்தை நேற்று மாலை அளவீடு செய்து கொண்டிருந்தார்.
அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ராம்மூர்த்தி, விவேக் என்பவரின் ஆதரவாளர்கள் இரு தரப்பினராக மோதிக்கொண்டனர். அப்போது துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டனர். இதில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் இன்று கூறுகையில்," இந்த மோதலில் விவேக் மற்றும் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரி அஜய் தாகத், பஞ்சாயத்து அலுவலக ஊழியர் ரமாகாந்த் ரகுவன்ஷி உள்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் பரேலியிலும், இருவர் உதய்புரா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" என்று கூறினர்.
நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் குச்வாடா கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.