கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனநெருக்கடி மிகுந்த நாகர்கோவில் மாநகரப் பகுதியில் அதிக பாரம் ஏற்றிவந்த 9 டாரஸ் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளத்திற்குத் தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் தொடர்ந்து நடந்துவரும் இந்தக் கடத்தல் சம்பவங்களினால் விபத்துகளும் தொடர்கதையாகி வந்தது. இந்தநிலையில் கனிம வளக்கொள்ளையைத் தடுத்திடும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களைப் பிடிக்கவும் எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் அதிக பாரத்துடன் இன்று காலையில் கனரக வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அதைத் தடுத்து நிறுத்திய போலீஸார், அதிகபாரம் ஏற்றிச் சென்ற 9 கனரக வாகனங்களைப் பிடித்துச் சென்று கோட்டாறு காவல் நிலையத்தில் நிறுத்தினர். அதில் கல், பாறைக்கல் உள்ளிட்ட பொருள்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட அதிகமாக இருந்தது.
நேற்று மாலையும் இதேபோல் கனரக வாகனங்களில் ஓவர்லோடு கொண்டு செல்லும் வாகனங்கள் குமரி மாவட்டம் முழுவதும் பிடிக்கப்பட்டன. அந்த லாரிகளுக்கு மொத்தமாக 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.