திமுக பெண் பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை: நகராட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரம்


வெட்டி கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நகரின் மையப்பகுதியில் வைத்து திமுக செயற்குழு உறுப்பினரின் மகன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தில் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சார்ந்தவர் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி திமுக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் ஏற்கெனவே தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகித்தவர். இவருடைய மூத்த மகன் ராஜேஷ். செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மைப் பணிகள் திட்டத்தின் மேற்பார்வையாளராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இவர் இன்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வந்தவர் அங்கிருந்து புளியங்குடி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவரில் ஒருவர் ராஜேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். பின் தலை, கழுத்து, மற்றும் கைப்பகுதியில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ராஜேஷின் உறவினர்கள் சாலை மறியல்

இது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீஸார் விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட ராஜேஷ் உடலை ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு பரிசோதனைக்கு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அங்குவந்து அவர்களை சமாதானப்படுத்தினர். அந்த பகுதியில் போதிய அளவு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் அவை எதுவும் செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நகராட்சி அலுவலகத்தில் பட்டப்பகலில் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொலையாளிகளை அடையாளம் காண்பதற்கு போலீஸார் திணறி வருகின்றனர். தேர்தல் முன் பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x