கொடைக்கானலில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவரை போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதி அஞ்சுரான்மந்தை கிராமத்தில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது இரு பெண் குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களாக வசித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டின் அருகே ராமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நெதர்லாந்து தம்பதியினரின் இரு பெண் குழந்தைகளுடனும் ராமராஜ் சகஜமாக பழகி வந்துள்ளார். இதனை பயன்படுத்தி அச்சிறுமிகளின் பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் சிறுமிகள் இருவரையும் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கூட்டி சென்றுள்ளார் ராமராஜ்.
அங்கு ஒரு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், இதனை பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதேபோல் மற்றொரு சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் ராமராஜ்.
இது குறித்து தங்கள் பெற்றோரிடம் சிறுமிகள் கூறிய நிலையில் அந்த சிறுமிகளின் தாய் ராமராஜின் பாலியல் சீண்டல் குறித்து கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் சிறுமிகளிடம் விசாரணை நடத்திய போலீஸார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராமராஜ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.