சிவகங்கையில் நடந்த கோர விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, தெற்கு வாடி கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராஜம்மாள் மற்றும் உறவினர் அழகம்மாள் ஆகியோருடன் தங்களது கிராமத்தில் இருந்து சிவகங்கை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது உருளி விலக்கு பகுதியில் மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயற்சித்த போது, ஆறுமுகம் என்பவர் ஓட்டிவந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த அவரது மனைவி ராஜம்மாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவரது உறவினர் அழகம்மாள் படுகாயம் அடைந்தார். இவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் உயிரிழந்த ரவியின் உடலுக்கு முதலுதவி செய்ய முயற்சித்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது. மனைவி கண்முன்னே கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...