பசிப்பதாக போலீஸார் பிடியில் இருந்து தப்பியோடிய கைதி: கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு


உணவு சாப்பிடும் பெர்லின் ஷெரில்

நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டா ரஷ்யாவைச் சேர்ந்தவர், பசி எடுத்ததால் ஓட்டம் பிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் பெர்லின் ஷெரில்(35). சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்த இவர், கோவை மாவட்டம், ஆனைமலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தார். அப்போது, அவர் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக போலீஸார் அவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய போது விசா காலம் முடிந்த பிறகும், இந்தியாவில் தங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து பெர்லின் ஷெரிலை கைது செய்த போலீஸார், கோவை இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனால் அவர் விசாரணை கைதியாக, திருச்சியிலுள்ள முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு பெர்லின் ஷெரிலை போலீஸார் அழைத்து வந்தனர். நீண்ட நேரமாக நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஷெரிலுக்கு பசி ஏற்பட்டதால், போலீஸாரிடம் உணவு கேட்டுள்ளார். ஆனால், விசாரணை முடிந்த பின் உணவு வாங்கித்தருவதாக போலீஸார் சொன்னதால், அவர்களுடன் ஷெரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் மிகவும் பசிப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்பில் இருந்து அவர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவரைப் பின் தொடர்ந்த போலீஸார், சமாதானம் செய்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்தனர். இதனால் அவர் சமாதானமானார். இந்த சம்பவத்தால் கோவை நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

x