அடுத்தவர்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி 39 பேருக்கு முறைகேடாக சிம் கார்டு விற்பனை செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி நெய்க்காரப்பட்டி சண்முகம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் சிம் கார்டு விற்பனை செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேடசந்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது ஓட்டுநர் உரிம அடையாள அட்டை காணாமல் போனதாகவும், அந்த அட்டையை பயன்படுத்தி தனது பெயரில் சிம் கார்டு வாங்கி பயன்படுத்தப்படுவதாகவும் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார், பழநியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அடுத்தவர்களின் அடையாள அட்டைகளை ஆவணங்களாக காட்டி 39 சிம் கார்டுகளை முறைகேடாக விற்பனை செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து ரமேஷ் மீது மோசடி வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.