ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சன் மனைவி மூலம் ரூ.75 லட்சம் பரிமாற்றமா? - தீவிர விசாரணை


சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோனிஷாவின் வங்கிக் கணக்கிலிருந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் மொட்டை கிருஷ்ணனுக்கு ரூ 75 லட்சம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த அஸ்வத்தாமன், அவரது தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்திலையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியானது. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு இருவரும் செல்போனில் பேசி இருந்ததாகவும் தகவல் வெளியானது.

அப்போது மொட்டை கிருஷ்ணன், தனது பள்ளி காலத்து நண்பர் என்பதாலும் அவர் ஒரு வழக்கறிஞர் என்பதால், தனக்கு அவருடன் வழக்கு தொடர்பாக பழக்கம் இருப்பதாக மோனிஷா தெரிவித்திருந்தார். மேலும் மொட்டை கிருஷ்ணனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பது தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மோனிஷாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 75 லட்சம் மொட்டை கிருஷ்ணனுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மோனிஷா பண உதவி செய்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணை திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

x