சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வாணவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் போது நிகழ்ந்த விபத்தில் பெண் பலியானார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள இரணிபட்டி ஈச்சங்காட்டு மலையாடிவாரத்தில் மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இங்கு வாணவேடிக்கை வெடிப் பொருட்கள் தயாரிப்பதை குடிசை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இங்கு ஏற்பட்ட திடீர் விபத்தில் வாணவேடிக்கை வெடிகள் வெடித்து சிதறின. இதில் அங்கு வெடிகள் தயாரிக்கப் பயன்படுத்திய தகர கொட்டகை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கொட்டகைக்குள் இருந்த முருகனின் மனைவி மீனா படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக புழுதிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.