இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ராஜபாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு பேசி அறிமுகமாகினர். அப்போது பரஸ்பரம் இருவரது புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு அறிமுகமான அந்த வாலிபரின் எண்ணில் இருந்து வீடியோகால் அழைப்பு வந்தது. மாணவி அதை எடுத்துப் பேசியபோது அதில் புகைப்படம் அனுப்பிய நபர் இல்லை. வேறு ஒருவர் இருந்தார். இதுகுறித்து அந்த மாணவி கேட்டதற்கு அழகான முகத்தை அனுப்பினால் தானே பெண்கள் பேசுவார்கள். அதனால் தான் போலியான படத்தை அனுப்பினேன் என கூலாகச் சொல்லி உள்ளார்.
இதனால் குறைந்தபட்ச நேர்மைகூட அந்த வாலிபருக்கு இல்லை என நட்பைத் துண்டித்துக் கொண்டார் பிளஸ் 2 மாணவி. ஆனால், அந்த வாலிபர் அந்த மாணவிக்கு தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ்கள், புகைப்படங்கள் என அனுப்பி பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.அவர்கள் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவா(19) என்பது தெரிய வந்தது. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்தனர்.