பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ வெளியிட்ட சர்ச்சை வீடியோ தொடர்பாக தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை முன்னிலைப்படுத்தி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ ஜொமோட்டோ நிறுவனத்திற்கே பின்னடைவாகிவிட்டது.
கடந்த 2001-ம் ஆண்டு ஆமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளியான ‘லகான்’ திரைப்படத்தில் ‘கச்ரா’ (Kachra) என்ற கதாபாத்திரத்தில் பட்டியலினத்தவராக நடித்திருந்தார் ஆதித்ய லக்கியா. இந்தக் கதாபாத்திரத்தை மீட்டூருவாக்கம் செய்து தனது வீடியோவில் பயன்படுத்திகொண்ட ஜொமோட்டோ அவரை குப்பையாக சித்தரித்திருந்தது. ஜொமோட்டோவின் வீடியோவில் கச்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆதித்ய லக்கியா மனித மேஜையாகவும், கை துண்டு, விளக்கு, பூந்தொட்டி, காகிதம் போல சித்தரிக்கப்பட்டு, அதில், இத்தனை கிலோ குப்பைகளால் இந்த பொருட்களெல்லாம் உருவாகியிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.
ஒடுக்கப்பட்ட சமூகமாக காட்டபட்ட கதாபாத்திரத்தை குப்பை போல சித்தரித்ததற்கு இந்த வீடியோவிற்கு எதிராக இந்தியா முழுவது ம் எதிர்ப்பு எழுந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ட்விட்டரில் ‘பாய்காட் ஜொமோட்டோ’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை ஜொமோட்டோ நிறுவனம் நீக்கியது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதற்காக ஜொமோட்டோ நிறுவனத்திற்கு எதிராக தேசிய எஸ்,சி, எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உடனடியாக இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்குமாறு போலீஸ் கமிஷனர் மற்றும் டியூப் குடியுரிமை குறைதீர்க்கும் அதிகாரியிடம் தேசிய எஸ்.டி, எஸ்.சி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை பெறாவிட்டால், ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பலாம் என்றும் ஆணையத்தின் தலைவர் விஜய் சாம்ப்லா எச்சரித்துள்ளார்.