புனே- மும்பை விரைவுச்சாலையில் ரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் லாரி வெடித்துச் சிதறியதில் 4 பேர் பலியாயினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே-மும்பை விரைவுச்சாலையில் ரசாயனம் ஏற்றிக் கொண்டு லாரி இன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி லோனாவாலா அருகே உள்ள மேம்பாலத்தில் வரும் போது திடீரென கவிழ்ந்ததில் ரசாயனம் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.
இதனால் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து சுமார் 10 அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. லாரி கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் டேங்கர் லாரியில் இருந்து கசிந்த ரசாயனத்தால் ஏற்பட்ட தீயால், பாலத்திற்குக் கீழே சென்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவன் உயிரிழந்தார். அவனது பெற்றோரும் இதில் படுகாயமடைந்தனர்.
இந்தவிபத்து குறித்து லோனாவாலா காவல் நிலைய அதிகாரி கூறுகையில்," லோனாவாலா மற்றும் கண்டாலா இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து டேங்கர் தீப்பிடித்து வெடித்ததால், பாலத்திற்குக் கீழே உள்ள சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மீது ரசாயனத்தில் பிடித்த தீக்கங்குகள் விழுந்தன. இதில் கீழே சாலையில் சென்ற நான்கு வாகன ஓட்டிகள் காயமடைந்தனர் அதில் மூன்று பேர் இறந்தனர். டேங்கரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் அந்த வாகனத்தில் இருந்த இருவர் காயமடைந்தனர்" என்று கூறினார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புனே- மும்பை விரைவுச்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.