சிவகங்கை: சிவகங்கையில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்புத் துறை துணை அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே சூரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகமூர்த்தி. இவர் அப்பகுதியில் கோழிப் பண்ணை தொடங்க மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், தடையில்லா சான்றிதழ் தருவதற்கு மாவட்ட தீயணைப்புத் துறை துணை அலுவலர் நாகராஜன் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பகமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
அவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நாகராஜனிடம் கற்பகமூர்த்தி ரசாயன பவுடர் தடவிய ரூ.5,000க்கான ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ, எஸ்ஐ ராஜா முகமது உள்ளிடோர் நாகராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.