சோகம்... பழுது நீக்கும் பணியின் போது விபரீதம்...மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!


உயிரிழந்த வீரமணி

சென்னையில் மின்மாற்றியில் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் ஓருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழுது நீக்கும் பணி

சென்னை திருவொற்றியூர் ஜீவன்லால் நகர் முதல் எண்ணூர் வரை நேற்று இரவு 8 மணியிலிருந்து சுமார் 3 மணி நேரத்தில் மேலாக மின் தடை ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் திருவெற்றியூர் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வீரமணி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழுதான மின்மாற்றியில் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் எண்ணூர் பகுதியிலும் ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எண்ணூரில் ஊழியர்கள் வேலை முடிந்து ஊழியர்கள் மின்மாற்றியை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திருவொற்றியூர் ஜீவன்லால் நகர் பகுதியில் மின்மாற்றியில் பழுது பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஊழியர்கள் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

உடனே அங்கிருந்த இருந்த பொதுமக்கள் இருவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த ஊழியர் வீரமணி (47) மருத்துவமனை கொண்டு‌ செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் திருவொற்றியூரைச் சேர்ந்த முருகேசன்(40) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் வீரமணி உயிரிழந்தாக குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து திருவெற்றியூர் போலீஸார் விரைந்து சென்று வீரமணி உடலைக் கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரமணிக்கு பானுமதி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்மாற்றியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x