சென்னையில் வீட்டு வேலை செய்யவில்லை என தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி சத்திரம் ஏழாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். பெயின்டராக வேலை பார்த்து வரும் இவருக்கு சுமதி என்ற மனைவியும் சிந்து(21)என்ற மகளும் இருந்தனர். சிந்து செயின்ட் தாமஸ் கல்லூரி எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் எந்த வேலைகள் எதுவும் செய்வதில்லை என சிந்துவை அவரது தாய் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல் நேற்று வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த சிந்துவை அவரது தாய் சுமதி அடித்ததாக தெரிகிறது. இந்நிலையில், மதியம் சுமதி ரேஷன் கடை சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய போது, மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உதவியுடன் சிந்துவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் டி.பி சத்திரம் போலீஸார். சிந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு முன்பு சிந்து எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் சிந்து தற்கொலை குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.