எஸ்ஐ-க்கு கொலை மிரட்டல்: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது


சேலம்: சேலத்தில் போலீஸ் எஸ்ஐ-க்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல் நிலைய எஸ்ஐ அழகுதுரை தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் நங்கவள்ளி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால் வந்துள்ளார்.

எடப்பாடி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இவர் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மர்மமான முறையில் கனகராஜ் உயிரிழந்த விவகாரத்தில் அவரது செல்போன், சிம்கார்டுகள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்த வழக்கில் தனபால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது, ஜாமீனில் வெளியேவந்துள்ள தனபால், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ அழகுதுரையிடம் மேச்சேரி காவல் நிலையத்தில் தன் மீது வழக்குப் பதிய உடந்தையாக இருந்ததாக கூறி அவரிடம் வாக்குவாதம், தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்போது, அருகில் இருந்த சிறப்பு எஸ்ஐ-க்கள் பழனிசாமி, மூர்த்தி, அரிசியப்பன் உள்ளிட்டோர் தனபாலை பிடித்தனர். இதுகுறித்து எஸ்ஐ அழகுதுரை, தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தனபால் மீது புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில், தாரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனபாலை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

x