தஞ்சாவூர்: காதலர்களை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறித்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஊழியர், கடந்த ஆக.16-ம் தேதி இரவு தனது காதலியை அவரது சொந்த ஊரில் கொண்டு சென்று விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
தஞ்சாவூர்-திருவையாறு புறவழிச்சாலை எட்டுகரம்பை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண் வாந்தி எடுத்துள்ளார். இதனால், மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்தியபோது, அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர், இருவரையும் பணம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர்.
அப்போது, இருவரும் தங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர். அதற்கு அந்த நபர்கள், யாரிடமாவது கூறி, கூகுள் பே மூலம் எங்களுக்கு பணம் அனுப்ப சொல்லுங்கள் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அந்தப் பெண் தனது சகோதரி மூலம், தனது காதலனின் செல்போனுக்கு கூகுள் பே மூலம் ரூ.3 ஆயிரம் அனுப்ப செய்துள்ளார்.
அதன்பின், அந்தப் பணத்தை, 5 பேரில் ஒருவன் தனது ‘கூகுள் பே’ கணக்குக்கு பணத்தை மாற்றிக்கொண்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின்னர், இதுகுறித்து அந்த பெண்ணின் காதலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கள்ளப்பெரம்பூர் போலீஸார், கூகுள் பே மூலம் பணம் பெற்ற செல்போன் நம்பரை வைத்து விசாரித்தபோது, காதலர்களை மிரட்டி பணம் பறித்தது, தஞ்சாவூர் வடகால் பகுதியை சேர்ந்த பாபு(24), மணிகண்டன்(27), வல்லரசன்(21), சார்லஸ்(29), ரெட்டிபாளையம் பிரதான சாலையைச் சேர்ந்த விக்கி(22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் பாபு, மணிகண்டன், வல்லரசன், சார்லஸ் ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விக்கியை தேடி வருகின்றனர்.