பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மேலும் 4 பேர் கைது


கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த போலி பயிற்சியாளர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை முகாம் நடந்தது. அதில் அப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின்போது பள்ளி வளாகத்தில் மாணவிகள் தங்கினர்.

முகாமில், முகாம் பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் (35) என்பவர் 12 வயது மாணவிக்கு, பாலியல் தொல்லைக்கு கொடுத்துள்ளார். இதில், மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே இச்சம்பவம் வெளியே தெரியவந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் (39), பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி (52), ஆசிரியர், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 7 பேரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் தலைமறைவானவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு கோவையில் பதுங்கியிருந்த சிவராமனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு அவரை அழைத்து வரும் வழியில் தப்ப முயன்று கீழே விழுந்ததில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்ட போலீஸார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

சிவராமன், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தார். தற்போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இவ்வழக்கில் கந்திகுப்பத்தைச் சேர்ந்த ஆசிரியை கோமதி(52), தருமபுரி மாவட்டம் எட்டிமாரம்பட்டியை சேர்ந்த சீனிவாசன்(27), காவேரிப்பட்டணம் திம்மாபுரத்தைச் சேர்ந்த முரளி(30) ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்தனர். இதையடுத்து, இவ்வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகாம் குறித்து விசாரணை: இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு கூறியதாவது: தனியார் பள்ளியில் நடந்த முகாமுக்கும், என்சிசி-க்கும் தொடர்பு இல்லை. என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விரிவான அறிக்கை கேட்டுள்ளது. புகார் பெற்றவுடன் 4 தனிப்படை அமைத்து, 11 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மற்றும் வெளி இடங்களில் மாணவிகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக ‘1098' என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘என்சிசி பயிற்சி முகாமில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளானது கடும் கண்டனத்துக்குரியது. தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, கேரளா, கர்நாடகாவைப் போல், பள்ளிக் குழந்தைகளுக்கான பாதுகாப்புக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகளில் சட்ட நிபுணத்துவம், கள அனுபவம் உடைய நபர்களைப் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து தீவிரமாகச் செயலாற்றும் மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

என்சிசி தலைமை விளக்கம்: தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் அந்தமான் நிகோபார் என்சிசி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

அம்மாணவி பங்கேற்ற முகாம் போலியானது. இதேபோல, அதை நடத்தியவர்களும் என்சிசி உறுப்பினர்கள் அல்ல. அவர்களும் போலியானவர்கள். என்சிசி-க்கும், இந்த முகாமுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x