கோவை: கோவை போலீஸாரால் தேடப்பட்டு வந்த இரு ரவுடிகள் உட்பட மூவரை சிம்லாவில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதில் தப்பிக்க முயன்ற போது ரவுடிகள் இருவரின் கால்கள் முறிந்தன.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் கடந்த ஜூன் மாதம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவுக்கு ஆதரவாக கொண்டையம்பாளையம் அருகேயுள்ள லட்சுமி கார்டனைச் சேர்ந்த ரவி என்ற ரவீந்திரன் (23), கோவில்பாளையம் அருகேயுள்ள காபிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (21) மற்றும் அவரது குழுவினர் செயல்பட்டுள்ளனர். அப்போது இவர்கள் எதிர் தரப்பின் இருசக்கர வாகனத்தையும் திருடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து பிரதீப், ஜெர்மன் ராகேஷ், கண்ணன், சந்தோஷ், தீபக், ராகுல் ஆகியோரை கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ரவீந்திரன், நந்தகுமார், சிராஜூதீன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் கோவில்பாளையம் போலீஸார் தேடிய போது, மேற்கண்டவர்களில் ரவீந்திரன், நந்தகுமார் ஆகியோர் இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவில்பாளையம் போலீஸார், கடந்த 15-ம் தேதி சிம்லா சென்று அங்கு பதுங்கியிருந்த ரவீந்திரன், நந்தகுமார், சிராஜூதீன் ஆகியோரை கைது செய்தனர்.
சிம்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது, குரும்பபாளையம் சாலையில் உள்ள ஒரு இடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக இவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீஸார் மூவரையும் அழைத்துக் கொண்டு நேற்று (ஆக.18) குரும்பபாளையத்துக்குச் சென்றனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவீந்திரன், நந்தகுமார் ஆகியோர் கீழே விழுந்ததில் அவர்களது கால்கள் முறிந்தன. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது,‘‘ரவுடிகளான ரவீந்திரன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகளும், நந்தகுமார் மீது 8 வழக்குகளும் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ரத்தினபுரியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் இவர்களுக்கு தொடர்புள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் என்பவரை, அவரது எதிர்தரப்பினர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கோவை நீதிமன்றம் அருகே கொலை செய்தனர். இதில் ரவீந்திரன் குழுவினர் காமராஜபுரம் கவுதம் தலைமையிலும், கொல்லப்பட்ட குரங்கு ஸ்ரீராம் தரப்பினர் ரத்தினபுரியைச் சேர்ந்த கவுதம் தலைமையிலும் இயங்கி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது’’என்றனர்.