மகளிர்க்கு இலவச பேருந்து பயணம்... எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கொளுத்தி போராட்டம்!


ஆட்டோவுக்கு தீ வைப்பு

தெலங்கானா மாநிலத்தில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் இல்லம் முன்பு ஆட்டோவுக்கு டிரைவர் தீ வைத்து, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (ஆர்டிசி) பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயண செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.

அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இலவச பேருந்து பயணத் திட்டத்தை 'மகாலட்சுமி திட்டம்' என்ற பெயரில் காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்தியது.

இதற்கிடையே பெண்களுக்கு ஆர்டிசி பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தால் தங்கள் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தில் ஆட்டோ டிரைவர்கள் புகார் தெரிவித்து தொடர்ந்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், தங்கள் வருவாய் இழப்புகளை சமாளிக்க அரசு நிதி உதவி வழங்க வலியுறுத்தி, அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹைதராபாத் பிரஜா பவன் அருகே, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆட்டோ டிரைவர் ஒருவர் நேற்று மாலை தனது ஆட்டோவுக்கு தீ வைத்தார்.

ஆட்டோவை கொளுத்திய டிரைவர்

மேலும் அவர் தனது உடலிலும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு விரைந்து சென்ற போலீஸார் ஆட்டோ ஓட்டுநரை காப்பாற்றினர். போலீஸாரின் விசாரணையில் அவரது பெயர் தேவா என தெரியவந்தது.

பிரஜா பவன், முந்தைய பிஆர்எஸ் அரசில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. இது தற்போது துணை முதல்வர் மல்லுப்பட்டி விக்ரமார்காவின் அதிகாரப்பூர்வ இல்லமாக உள்ளது. மேலும், இங்கு வாரத்தில் இரண்டு முறை, பொதுமக்களிடம் குறைகள் தொடர்பான மனுக்களும் பெறப்படுகிறது.

அரசு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வர் இல்லத்தின் முன்பு ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

x