8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு தூக்கு... கத்தார் நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி!


இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அல்தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் இந்தியாவின் கடற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.

இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றி வந்த பூர்ணேண்டு திவாரி இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிறுவனம் கத்தார் நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பயிற்சி தொடர்பான சேவைகளை வழங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இவர்கள் 8 பேரும், கத்தார் நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவரின் தங்கையான நீத்து பார்கவா என்பவர், இந்த விவகாரத்தை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரிகள் அனைவரும் இந்தியாவின் பெருமிதம் என்பதால் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 8 பேரும் கைது

இந்நிலையில் இவர்கள் மீதான வழக்கில் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு அனைத்து விதமான சட்ட ரீதியான மற்றும் தூதரக ரீதியிலான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இருப்பினும் 8 பேரும் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கைதிற்கான காரணம் வெளியாகவில்லை

8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

x