ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஆற்காடு சுரேஷின் மனைவி கைது


சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில், திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பலர் அடுத்தடுத்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இக்கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பது போலீஸாரின் தொடர் விசாரணையில் உறுதியானது. இதனால் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர், அந்த வகையில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து தற்போது ஆந்திராவில் தலைமறைவாகி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் பொன்னை பாலுவுக்கு, பொற்கொடி ரூ. 1.5 லட்சம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொற்கொடிக்கு வரும் செப்டம்பர் 2ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இவரின் கைதை அடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

x