அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!


தவறான கணக்குகளை தாக்கல் செய்த மற்றும் கணக்கே தாக்கல் செய்யாத, 10,000 நிறுவனங்கள் உரிய விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும், மாத ஊதியம் பெறும் தனி நபர்களும், வணிகர்களும், தங்கள் வருமானம் மற்றும் செலவு கணக்கை, ஆண்டு தோறும் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநரக அதிகாரிகள், ஆன்லைன் வழி ஆண்டறிக்கைகளை ஆய்வு செய்தனர்.

ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களின் கணக்குகளையும், வங்கிகள் மற்றும் ஜி.எஸ்.டி., அறிக்கைகளையும் அவ்வாறு பரிசீலித்ததில், பல்வேறு முரண்பாடுகள் தெரியவந்துள்ளன. அதேபோல, பல நிறுவனங்கள் வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்தாலும், ஆண்டறிக்கை தாக்கல் செய்யாததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, 10,000 தொழில் நிறுவனங்களுக்கு, வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 600க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மற்றும் நிதி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோட்டீஸ் பெற்ற நிறுவனங்கள், உரிய காலக்கெடுவுக்குள் பதில் அளித்து, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

x