கோயம்பேடு பழ மார்க்கெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயுத பூஜையை ஒட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாலை முதலே பூஜை பொருட்கள், பழங்கள், பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. சேப்பாக்கம் கிருஷ்ணசாமி சாலையை சேர்ந்த பழ வியாபாரியான இளவரசன் என்பவர் தனது காரில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் பழ மார்க்கெட் வளாகத்தில் தனது காரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்று பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் காரில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. பின்னர் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனைக் கண்டு பழ மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கார் அதற்குள் முற்றிலும் எரிந்து நாசமானது. காரின் அருகே மற்ற வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. கார் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.