சென்னை: பம்மல் நாகல்கேணி மற்றும் புதுபெருங்களத்தூரில் இரண்டு வீடுகளின் கதவை உடைத்து 24 சவரன் நகை மற்றும் ரூ.1.27 லட்சத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பம்மல் நாகல்கேணி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாரதா (58). அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், விருந்தை முடித்து விட்டு மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு, ஜன்னல்கள் எதுவும் உடைக்கப்படாமல் பீரோவில் மறைத்து வைத்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாரதா, இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சாரதா வீட்டுச் சாவியை அருகில் மறைத்து வைத்துவிட்டுச் செல்வது வழக்கம் என்றும், இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யாரோ, சாவியை எடுத்து பீரோவில் வைத்திருந்த நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
மற்றொரு திருட்டுச் சம்பவம்: பெருங்களத்தூர் சிதம்பரநாதன் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (67). இவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 9 சவரன் நகை, ரூ1.27 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.