பொன்னேரி | திமுக பிரமுகர் வீடு, லாரி பார்க்கிங் யார்டில் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக 3 பேர் கைது


பொன்னேரி: சோழவரம் பகுதியில் திமுக பிரமுகர் வீடு மற்றும் லாரி யார்டில் நாட்டு வெடி குண்டுகள் வீசியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (38).இவர், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுகதுணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி அபிஷாபிரியதர்ஷினி, சோழவரம் ஊராட்சி மன்றத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மதிய வேளையில் 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் கும்பல், நாட்டு வெடி குண்டுகளை வீசியது. இதில், ஜெகன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

தொடர்ந்து, அந்த கும்பல், சோழவரத்தை அடுத்துள்ள சிறுணியம் பகுதியில் வியாபாரம் செய்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன்கள் சரண்ராஜ், சுந்தரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

பிறகு, அக்கும்பல், சோழவரம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் லாரி பார்க்கிங் யார்டு மீது நாட்டு வெடி குண்டுகளை வீசியுள்ளது. இதனால், சத்தம் கேட்டு வந்த, சோழவரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவாவை அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.

இது குறித்து, சோழவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நாட்டு வெடி குண்டுகள் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நாட்டு வெடி குண்டுகள் வீசிவிட்டு தப்பியோடியவர்கள் ஆந்திராவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆந்திராவுக்கு விரைந்த செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார், அங்கு பதுங்கியிருந்த சிறுணியம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற டியோ கார்த்திக்(21), சோழவரம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் என்கிற குதிரை சுரேஷ்(21), கோபி என்கிற குண்டு கோபி(25) ஆகிய 3 ரவுடிகளை நாட்டு வெடி குண்டுகள் வீசியது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில், குதிரை சுரேஷ், கடந்த ஆண்டு சோழவரம் அருகே மாரம்பேடு பகுதியில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளில் ஒருவரான முத்துசரவணனின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது சோழவரம், வில்லிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைகளில் நடைபெற்ற 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

டியோ கார்த்திக் மீது ஊத்துக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைகளில் நடந்த இரு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டு கோபி மீது சோழவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஜெகன் மற்றும் வெங்கடேசன் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு அவர்கள் கொடுக்காததால், டியோ கார்த்திக் தன் நண்பர்களுடன், நாட்டு வெடி குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

x