எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் மீது 6 பேர் கும்பல் தாக்குதல்


கரூர் நில மோசடி வழக்கில் ஜாமீன் பெற்று கையெழுத்திட்டு வரும் பிரவீண் என்பவர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

கரூர்: நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவரது ஆதரவாளரைத் தாக்கிய கும்பலைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரால் கடந்தஜூலை 16-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்கள் நிபந்தனை ஜாமீனில் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள்கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி, கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று காலை பிரவீன் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் காரை நிறுத்திவிட்டு, ஒரு கடையில் டீ குடிக்கச் சென்றார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 6 பேர் கும்பல் பிரவீனை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதில் காயமடைந்த பிரவீன்,கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் பிரவீன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரைத் தாக்கிய கும்பலைத் தேடி வருகின்றனர்

x