கஞ்சா போதையில் 108 முறை காதலனைக் குத்திக் கொன்ற பெண்... சிறைக்கு அனுப்பாது விடுவித்தது நீதிமன்றம்


மூளையை பாதிக்கும் கஞ்சா போதை

கஞ்சா போதையில் 108 முறை காதலனை கத்தியால் குத்திக்கொன்ற பெண்ணுக்கு, அமெரிக்க நீதிமன்றம் சிறைக்கு அனுப்பாது விடுவித்து ஆச்சரியம் தந்திருக்கிறது.

கலிபோர்னியாவை சேர்ந்த இளம்பெண் பிரைன் ஸ்பெஷர். இவர் தனது காதலன் சாட் ஓமெலியா உடன் சேர்ந்து கஞ்சா புகைத்தபோது, போதையின் உச்சத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது சரமாரியாக காதலனைக் குத்திக் கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே காதலன் பரிதாபமாக இறந்தார். பிரைன் ஸ்பெஷர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வழக்கு கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. காதலன் உடம்பில் அடையாளம் காணப்பட்ட108 கத்துக்குத்துகள் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

பிரைன் ஸ்பெஷர்

2018-ல் நடந்த இந்த கொலைச்சம்பவம் மற்றும் அதன் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததில், நேற்று நீதிபதி டேவிட் வோர்லி தீர்ப்பினை வழங்கினார். அதில் ஆச்சரியமாக, கொலைக்குற்றத்திலிருந்து பிரைன் ஸ்பெஷர் விடுவிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் நன்னடத்தை சார்ந்த கண்காணிப்பு மற்றும் 100 மணி நேர சமூக சேவை ஆகியவை மட்டுமே அவருக்கு விதிக்கப்பட்டன. அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தீர்ப்பினை, மோசமான முன்னுதாரணம் என்றும் சிலர் சாடி வருகின்றனர்.

கொலைச்சம்பவ நாளன்று, அதற்கு முன்னர் கஞ்சா புகைத்திராத பிரைன் ஸ்பெஷர், காதலனின் வற்புறுத்தலின் பெயரில் புகைக்கத் தொடங்கியிருக்கிறார். கட்டுக்கடங்காத வகையில் அவர் போதைப்பொருளை பயன்படுத்தியதில், ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்திருக்கிறார். அப்போது சமையல் கத்தியால் காதலனை சரமாரியாக குத்தி சாய்த்ததோடு, தன்னையும் குத்திக்கொண்டு விழுந்திருக்கிறார். இதனை பிரைன் ஸ்பெஷரின் வழக்கறிஞர்கள் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபித்தது வழக்கின் போக்கை மாற்றியது.

பிரைன் ஸ்பெஷர் - சாட் ஓமெலியா

கத்திக்குத்து கொலையின் பின்னணியில் ’கஞ்சாவால் தூண்டப்பட்ட மனநோய்’ மற்றும் ’தனது செயல்கள் கட்டுப்பாடு இல்லாத நிலை’ ஆகியவை இருந்ததாக வழக்கறிஞர்கள் நிரூபித்தனர். அதுவரை கஞ்சா புகைத்திராத பிரைன், காதலன் கட்டாயத்துக்காக முதல்முறையாக புகைத்ததோடு, அப்போதைய கட்டுக்கடங்காத போதை அவரை தன்னிலை மறக்கச் செய்திருக்கிறது என்றும் அந்த நிலையில் அவர் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். கஞ்சாவால் தூண்டப்பட்ட மனநலக் கோளாறால் பீடிக்கப்பட்டவரின் நடவடிக்கைக்கு அவரை பொறுப்பாளி ஆக்க மறுத்த நீதிமன்றம், பிரைன் ஸ்பெஷரை சிறைக்கு அனுப்பாது விடுவித்தது.

இதையும் வாசிக்கலாமே...

x