அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்


லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஆய்வு

தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளரின் காரை இடைமறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில், கட்டுக்கட்டாக ரூ.2.70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடியில் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு-கேரள எல்லையான புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி அருகே மாற்று உடை அணிந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

புளியரை சோதனை சாவடியில் லஞ்சப்புகார்

இந்த நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி என்பவர் தனது பணியை 8.30 மணி அளவில் முடித்துவிட்டு, தனது கணவரான ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

தவணைவிலக்கு அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிரேமா ஞானகுமாரியை தடுத்து நிறுத்தி அவர் கொண்டு சென்ற பேக்கை சோதனை செய்து உள்ளனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரியிடம் விசாரணை

அப்பொழுது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, இந்த பணம் அலுவலக பணமா? அல்லது லஞ்ச பணமா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்திய போது, பிரேமா ஞானகுமாரி பல்வேறு கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அவரிடம் இருந்த ரூ.2.70 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

x