விருதுநகர் : டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 3 வயது குழந்தை பலியான சோகம்!


டெங்கு காய்ச்சலால் சிறுமி தியா ஸ்ரீ (3) உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு ஒழிப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதும் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரது குழந்தைகள் திகன்யா ஸ்ரீ(4), தியா ஸ்ரீ (3) ஆகியோருக்கு காய்ச்சல் இருந்ததால் அவர்களுக்கு விருதுநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறுமிகள் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

இந்நிலையில் தியாஸ்ரீக்கு காய்ச்சல் அதிகரித்ததால், அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து சிறுமி தியா ஸ்ரீ மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தியா ஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x